கேரளாவில் பலருக்கு இரட்டை வாக்குரிமை: இ- வாக்காளர் அட்டை பதிவிறக்கத்தால் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: ேகரளாவில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றிய பலருக்கும் 2 இடங்களிலும் வாக்குகள் உள்ளன. நேற்று தொடங்கிய இ-வாக்காளர் அட்டை பதிவிறக்க வசதியை பயன்படுத்த  முயன்றபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. 2 இடங்களில் வாக்குகள் இருந்தால் மின்-வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியாது. இதுபோன்ற குளறுபடிகள் தேர்தலின்போது கள்ள  ஓட்டுகளுக்கு வழிவகுக்கும் என புகார்கள் எழுந்துள்ளன.  கடந்த மாதம் 31ம் தேதி வரை, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், தவறுகளை சரிசெய்யவும், இடமாற்றம் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

முகவரியை மாற்றும்போது, ​​புதிய இடத்தின் பெயர் பட்டியலில்  சேர்க்கப்பட்டு, பழைய இடத்தின் பெயர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் இருப்பது தான் பிரச்னை என ஊழியர்கள் கூறுகின்றனர். பழைய வாக்குச்சாவடியில் இருந்து பெயரை நீக்க வாக்காளர்கள் இப்போது ஆன்லைனில் அல்லது நேரில்  விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி டிகாரம் மீனா கூறுகையில், ‘மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக இடமாற்றம் செய்ய விண்ணப்பித்தவர்களுக்கு இரு இடங்களிலும் வாக்குகள் கிடைத்துள்ளது. புதிய இடத்திற்கு பெயர்களை  மாற்றும்போது, பழைய வாக்கு சாவடியில் உள்ள பெயரை நீக்கும் வகையில் மென்பொருள் கட்டமைக்கப் படவில்லை. இதற்கு ஒரு தீர்வு காணப்படும்’ என்றார்.

Related Stories: