புதுச்சேரியில் குடியரசு தினவிழா; கவர்னர் கிரண்பேடி தேசியக்கொடி ஏற்றினார்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு

புதுச்சேரி: 72வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சார்பில் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. இதையொட்டி, கவர்னர் கிரண்பேடி காலை 8.30 மணிக்கு மைதானத்துக்கு வந்தார். அவரை தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் வரவேற்று, விழா மேடைக்கு அழைத்து சென்றனர். பின்னர், கவர்னர் தேசியக்கொடியை ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கொரோனா பரவல் காரணமாக, என்சிசி, என்எஸ்எஸ், சாரண, சாரணியர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், அலங்கார வண்டி அணிவகுப்பு ஆகியவை நடைபெறவில்லை. இதில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா, அரசு செயலர்கள் சுந்தர வடிவேலு, சுர்பிர்சிங், அசோக்குமார், தேவேஷ் சிங், அருண், வல்லவன், சுந்தரேசன், சவுத்ரி அபிஜித் விஜய், ஆட்சியர் பூர்வா கார்க், சட்ட செயலர் ஜூலியட் புஷ்பா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாஸ்க் அணிந்தபடி கலந்து கொண்டனர்.

இவ்விழாவை முதல்வர், சபாநாயகரை தவிர்த்து அமைச்சர்கள், துணை சபாநாயகர், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் புறக்கணித்தனர். குறிப்பாக, பாஜக நியமன எம்எல்ஏக்கள் கூட விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் விழா மேடை அருகே போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் காலியாகவே கிடந்தன. பொதுமக்களும் வராததால் பார்வையாளர் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. காரைக்காலில் ஆட்சியர் அர்ஜூன் ஷர்மா, மாகேவில் மண்டல அதிகாரி அமல் ஷர்மா, ஏனாமில் மண்டல நிர்வாகி சிவராஜ் மீனா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றனர்.

Related Stories: