குடியரசு விழாவை சீர்குலைக்க திட்டம்? சீக்கியர் இயக்கம் மிரட்டல் மின்நிலையங்களில் பாதுகாப்பு: காவல்துறை ரோந்தும் அதிகரிப்பு

புதுடெல்லி: குடியரசு தினமான இன்று, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தும் நாடு தழுவிய விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளதால், போலீசார் கண்காணிப்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றனர். பேரணியிலும் குழப்பம் விளைவிக்கும் சக்திகள் ஊடுருவக்கூடும் எனவும் தகவல்கள் தெரிய வந்துள்ளதால், பதற்றம் அடங்காமல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின்சார பகிர்மான துணை நிலையங்களில் தாக்குதல் நடத்தி மின்சார விநியோகத்தை சீர்குலைக்கப் போவதாக சீக்கியர்களுக்கு நீதி எனும் போராட்ட இயக்கம் சார்பில் காவல்துறைக்கு மிரட்டல் வந்துள்ளது என தெரிவித்த அத்துறையின் மூத்த அதிகாரி, மின் துணை நிலையங்களில் பந்தோபஸ்து அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், தேவைக்கும் அதிகமான போலீஸ் படை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், துணை நிலையங்களில் குவிக்கப்பட்டு உள்ள போலீசார், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதிகள் செய்துள்ளதாகவும், அதிரடிப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான எந்த ஒரு நிலைமையையும் சமாளிக்கும் அளவிலும், மின்சார விநியோகம் தடங்கல் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ளதாகவும் டெல்லியில் மின்சாரம் விநியோகம் செய்யும் டாடா டிஸ்காம் நிறுவனமும் உறுதி தெரிவித்து உள்ளது. இது பற்றி டாடா டிஸ்காம நிறுவன கார்ப்பரேட் விவகாரங்கள் தலைவர் சித்தார்த் சிங் கூறுகையில், ‘‘டெல்லி போலீசாருடன் இணைந்து நிலைமையை தீவிரமாக கண்காணிக்கிறோம். அனைத்து மின்சார பகிர்மான நிலையங்களிலும் போதுமான அளவில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் செக்யூரிட்டி ஆட்களும் தீவிரமாக கண்காணிப்பு செலுத்தி வருகிறார்கள்’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: