கண்டப்பங்குறிச்சி-பெண்ணாடம் சாலையில் ஏற்படும் விரிசல்களால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேப்பூர் : 2 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட கண்டப்பங்குறிச்சி-பெண்ணாடம் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு பள்ளமாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளாகி உள்ளனர்.வேப்பூர் அருகே கண்டப்பங்குறிச்சியிலிருந்து பெண்ணாடம் செல்லும் சாலை உள்ளது. கொத்தனூர், வரம்பனூர், சிறுமங்கலம், எரப்பாவூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பயணிக்கும் முக்கிய சாலையாக இது திகழ்கிறது. நாள்தோறும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர்.

மேலும் நல்லூர்-பெண்ணாடத்தை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோக்களிலுமே அதிகளவு பயணங்கள் மேற்கொள்வர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலையில் கொத்தனூர் அருகே சாலை விரிசலடைந்து வலதுபுறத்தை காட்டிலும் இடதுபுறத்தில் அரை அடி ஆழத்துக்கு மேல் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை உள்வாங்கி பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

சாலை அமைக்கப்பட்ட 2 ஆண்டுக்குள் விரிசல் ஏற்பட்டு உள்வாங்குவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த சாலையில் உள்ள விரிசல்களையும், பள்ளத்தையும் உடனடியாக சரிசெய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: