விக்டோரியா மருத்துவமனையில் ஸ்டிக் உதவியுடன் நடக்கிறார் சசிகலா: மருத்துவர்கள் தகவல்

பெங்களூரு: விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இரும்பு ஸ்டிக் உதவியுடன் நடப்பதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான ஐ.சி.யு வார்டில் கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் அவர் வேகமாக குணமாகி வருகிறார். நேற்று மாலையில் எடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. 3 லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாசத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாடி துடிப்பு நிமிடத்திற்கு 84 முறை துடிக்கிறது. பி.பி கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது. சர்க்கரையின் அளவு 198 உள்ளது.

இருப்பினும் இன்சூலின் ஊசி செலுத்துவது தொடர்ந்து வருகிறது. அவராகவே எழுந்து நிற்கவும், அமரவும் முடிகிறது. இரும்பு ஸ்டிக் கொடுக்கும்போது, அதை பிடித்து நடமாடுகிறார். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்கிறார். கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வருவதால், புரோட்டோகால் விதிமுறைப்படி கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.யூவில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் சசிகலாவின் உறவினர், இளவரசியின் உடல் நிலை சீராகவுள்ளது. வழக்கம்போல அவர் காணப்பட்டாலும், அறிகுறியில்லாத கொரோனா என்பதால், அதற்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதாக மருத்துவமனை மருத்துவர்கள் ரமேஷ் கிருஷ்ணா மற்றும் ஜெயந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

* விடுதலை மருத்துவமனையிலா, சிறையிலா?

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அதற்கான குவாரன்டைன் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது.  இந்நிலையில் 27ம் தேதி அவர் விடுதலை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி அவர் விடுதலையாவார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தாலும், 7 அல்லது 14 நாட்கள் குவாரன்டைன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியுள்ளதால், 27ம் தேதி விடுதலைக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. மற்றொரு புறம், விடுதலை தேதியை கடந்து,  மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என்றால், சிறைக்கு அவர் அழைத்து செல்லப்படுவாரா அல்லது மருத்துவமனையில் இருந்தப்படியே விடுதலை செய்யப்படுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சிறை விதிமுறைப்படி தற்போது சசிகலா தண்டணை கைதி அடிப்படையில், போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவே குறிப்பிடுகிறது. உடல் நலம் தேறிய பின்னர் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்று, அங்கு கைதிகளுக்குரிய அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்துதான் விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் சில ஆவணங்களில் அவர் கையெழுத்திட வேண்டியுள்ளது. அந்த ஆவணங்களை மருத்துவமனைக்கு எடுத்துவர கூடாது என்று விதிமுறை உள்ளது. அதனால் சிகிச்சை எப்பொழுது முடிந்தாலும், அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்துதான் விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  

மருத்துவமனையில் இருந்தப்படி அவர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அதற்கு சிறைத்துறை சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதே நேரம் சிறைத்துறை நிர்வாகம் கொரோனா குவாரன்டைன் விதிமுறையை கடைபிடித்து விடுதலை செய்தால் பிப்.2ம் தேதி அல்லது பிப்.5ம் தேதிதான் அவர் விடுதலை செய்யப்படகூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இறுதி முடிவுகள் இன்று அல்லது நாளை சிறைத்துறை சார்பில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Related Stories: