தடுப்பூசி பற்றி பரப்பப்படும் வதந்திகளை முறியடியுங்கள்: என்சிசி.க்கு மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை முறியடியுங்கள்,’ என்று இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் குழுக்கள் இடையே பிரதமர் மோடி காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறியதாவது, ‘சவாலான தருணங்களை நாடு எதிர்கொண்டபோது என்சிசி, என்எஸ்எஸ் அளித்த பங்களிப்புகள் மகத்தானவை. இந்த கொரோனா தொற்று காலத்திலும் பாராட்டத்தக்க செயல்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆரோக்கிய சேது செயலி பற்றியும், கொரோனா பரவல் பற்றியும் விழிப்புணர்வை உண்டாக்கிய உங்கள் பணி போற்றத்தக்கது.

தற்போது, கொரோனா தடுப்பூசி தயாரிப்பை இந்திய விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு முடித்துள்ளனர். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தடுப்பூசி திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நீங்கள் எடுத்து செல்ல வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் பற்றி தவறாக பரப்பப்படும் வதந்திகளை முறியடிப்பதிலும், உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உங்கள் உதவி தேவை. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உண்மை செய்திகளை உங்களால் சென்று சேர்க்க முடியும்.

இந்தியா ஒரு சிலரால் தன்னிறைவை எட்டவில்லை. உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் தற்போதுள்ள இடத்தை நாடு எட்டியுள்ளது. இந்த உண்மையைப் புரிந்துதான் கடந்த 2014ம் ஆண்டு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் என்ற துறையை மத்திய அரசு உருவாக்கியது. இதன் மூலம், ஐந்தரை கோடி இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அரசு வழங்கியுள்ளது. திறன் வளர்ப்பு பயிற்சியாக மட்டும் அல்லாமல் வேலை வாய்ப்பையும் இத்துறை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: