இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை மீறி, அதிமுகவிற்கு தேர்தல் லாபம் கிடைக்கின்ற வகையில் அரசின் பணத்தையும், அதிகாரத்தையும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகிறார். இவையெல்லாம் தமிழக அரசின் பணத்திலும், மக்களின் வரிப்பணத்திலும் வெளியிடப்பட்டு இருப்பதாகும். சுமார் ஆயிரம் கோடி செலவில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது குறித்த புகாரினை, திமுக சார்பில் நானும் திமுக சட்டத் திட்ட திருத்தக் குழு செயலாளர் பி. வில்சன் எம்பி, சட்டத்துறை செயலாள கிரிராஜன் மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோரும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்து அளித்தோம். தமிழக அரசின் சார்பில் அதிமுகவை முன்னிலைப்படுத்தி வெளியிடப்படும் விளம்பரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையம் 7.10.2016ம் தேதி அன்று வெளியிட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்: இது முழுக்க முழுக்க, அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு விளம்பரங்களுக்கு பொருந்தும். ஆகவே, இனிமேலாவது தமிழக அரசு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் ஆதரிக்கும் வகையில் எந்த விளம்பரங்களையும் வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>