சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனே திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளில் 97% இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டன. இந்த சாலையை தமிழக முதல்வர் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகவே, திறப்புவிழா தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை உடனடியாக திறக்கப்பட வேண்டும். முக்கியமான சாலை ரூ.1075 கோடிக்கும் கூடுதலான செலவில் அமைக்கப்பட்டு, யாருக்கும் பயன்படாமல் கிடப்பது நல்லதல்ல. நீண்ட தாமதத்திற்கு பிறகு பணிகள் முடிவடைந்த பிறகும் கூட ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக அதன் திறப்பு விழாவை தாமதப்படுத்துவது சரியல்ல.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு ஊர்திகளும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களும் சென்னை மாநகருக்குள் நுழையாமலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும். இதன் மூலம் சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories:

>