சித்தகங்கா மடாதிபதி நினைவு நாள் உணவு தினமாக அனுசரிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

துமகூரு: ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உணவுடன் கல்வி வழங்கி வந்த சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசுவாமியின் நினைவு நாள் ஆண்டுதோறும் உணவு தினமாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். துமகூரு மாநகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்த டாக்டர் சிவகுமாரசுவாமிகள் தனது 111வது வயதில் கடந்த 2019 ஜனவரி 21ம் தேதி சிவனடி சேர்ந்தார்.

அவரின் இரண்டாமாண்டு நினைவு தினம் ேநற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதல்வர் எடியூரப்பா மடாதிபதிக்கு மலரஞ்சலி செலுத்தியபின் அவர் பேசும்போது, பழமையான சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக 80 ஆண்டுக்கும் மேலாக ஆன்மிக சேவை செய்ததுடன் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் தினமும் மூன்று வேளை உணவு வழங்கினார். அவரின் கருணையால் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற்று நல்ல நிலையில் உள்ளனர். நடமாடும் கடவுளாக லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் போற்றப்பட்டார்.

சிவகுமாரசுவாமிக்கு மாநில அரசின் சார்பில் உரிய கவுரவம் கொடுக்கும் வகையில் அவர் பிறந்த கிராமமான வீரபுராவில் நினைவிடம் அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வீரபுரா கிராமம் மிகபெரிய புண்ணியஸ்தலமாக உருவாக்கப்படும். மேலும் மாணவர்களுக்கு கல்வியுடன் உணவளித்த கொடை வள்ளலாக திகழும் சுவாமியின் நினைவு நாள் ஆண்டுதோறும் உணவு தினமாக அனுசரிக்கப்படும். இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’’என்றார்.

Related Stories: