தவறான கொள்கையால் ஏழை மக்களுக்கு பாதிப்பு: சமாஜ்வாடி மீது மோடி காட்டம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த சமாஜ்வாடி தலைமையிலான ஆட்சியின் தவறான கொள்கைகள் காரணமாக, ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் “2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு” வழங்கும் திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டம், கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி பயனாளிகள் வீடு கட்டியுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் 6.1 லட்சம் பயனாளிகளுக்கான ரூ.2,691 கோடி நிதியுதவியை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி விடுவித்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 2016ம் ஆண்டு ஆவாஸ் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் இருந்து தற்போது உங்களால் அகற்றப்பட்ட அரசிடம் பயனாளர்களின் பட்டியலை கோரினோம். தொடர்ச்சியான எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பயனாளர்களின் பட்டியல் கிடைக்கவில்லை. நாங்கள் நிதியை வழங்க தயாராகஇருந்தோம்.

அந்த நேரத்தில் இருந்த அரசின் நடவடிக்கையை ஏழை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். முந்தைய அரசின் கொள்கைகள் மற்றும் தவறான நோக்கங்களினால் ஏழைகள் பெரும் சுமைகளை தாங்க வேண்டியிருந்தது. ஏழைமக்கள் தாங்கள் வீடு கட்டுவதற்கு அரசு உதவி செய்யும் என்று கடந்த காலங்களில் நம்பவில்லை. எந்த மாதிரியான வீடுகள் கட்டித்தரப்பட்டது என்பதை மக்கள் மறக்கமுடியாது. ஆனால் தற்போது ஏழை மக்கள் அரசின் நிதியுதவியின் காரணமாக சொந்த வீடு கட்டுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: