நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி: மக்களவை சபாநாயகர் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, கடந்த மார்ச்சில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கடந்த செப்டம்பரில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. எனினும், உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர், பட்ஜெட் தொடராக  வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘வருகிற 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்2 கட்டங்களாக தொடங்குகின்றது. பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கேள்வி நேரத்துக்கு ஒரு மணி நேரம் அனுமதிக்கப்படும். மாநிலங்களவை காலை 9 மணி முதல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்,’’ என்றார்.

* 27, 28ல் பரிசோதனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு வருகிற 27, 28ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எம்பி.க்கள், அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த செப்டம்பரில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை உறுப்பினர்கள் 17 பேருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், குளிர்கால கூட்டத் தொடர் பாதியில் கைவிடப்பட்டது.

Related Stories: