‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது

லக்னோ: நண்பன் படத்தில் வீடியோ கால் மூலமாக மருத்துவருடன் பேசி நடிகர் விஜய் பிரசவம் பார்ப்பது போன்று, ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். டெல்லி நிசாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து கொரோனா சிறப்பு ரயில் மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பரிதாபாத்தை ரயில் தாண்டியபோது பி3 பெட்டியில் இருந்த கர்ப்பிணி கிரண் என்பவருக்கு வலி ஏற்பட்டது. அவர் தனது சகோதரனுடன் பயணித்துக்கொண்டிருந்தார். அந்த பெட்டியில் பெண்கள் யாரும் கிடையாது.

அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து பெட்டியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளியான லேப் டெக்னீசியன் சுனில் பிரஜாபதி அங்கு சென்றுள்ளார். அந்த பெண்ணிடம் விசாரித்ததில் அவருக்கு 20ம் தேதி பிரசவ தேதி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது சுனிலுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சுனில் தனது மருத்துவர் சுபர்ணா செனை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். வீடியோ கால் மூலமாக மருத்துவருடன் பேசி அவரது உதவியை நாடினார். பயணிகளின் சால்வை மற்றும் பயன்படுத்தப்படாத பிளேடு ஆகியவற்றை வைத்து அவர் நண்பன் பட பாணியில், வீடியோவில் மருத்துவர் அறிவுரையின்படி பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் மதுரா ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் கரண் மற்றும் அவரது குழந்தையை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரயிலில் மிகவும் தைரியத்தோடும், சாதுர்யமாகவும் செயல்பட்டு தாய் மற்றும் சேயை காப்பாற்றிய லேப் டெக்னீஷியன் சுனிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் டெல்லி வடக்கு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி மற்றும் பொதுநிர்வாக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் லேப் டெக்னீசியன் படிப்பை முடித்து இங்கு பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: