அர்னாப் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வலியுறுத்தல்

மும்பை: அர்னாப் கோஸ்வாமி, பார்தோ தாஸ்குப்தா இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கும்படி தேசியவாத காங்கிரஸ் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. டிஆர்பி எனப்படும் டிவி சேனல் பார்வையாளர் கணக்கீட்டில் முறைகேடு செய்ததாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் சிஇஓ பார்தோ தாஸ்குப்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் பாலகோட் தாக்குதல் உள்பட மத்திய அரசு எடுக்கும் பல ரகசியமான, முக்கிய முடிவுகளை அர்னாப் முன் கூட்டியே அறிந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், “நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை அர்னாப் முன்கூட்டியே தெரிந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற உள்துறை அமைச்சகத்தின் ரகசிய நடவடிக்கைகள் குறித்த செய்தியை அர்னாப் எப்படி தெரிந்து கொள்கிறார் என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்னாப் மீதான நிலைப்பாட்டை பாஜ விளக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: