கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மராட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுராவ். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு வெள்ளக்குட்டை - நிம்மியம்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் சாக்குமூட்டை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியோடு கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையை மீட்டனர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பால்வாடி தெருவை சேர்ந்த நாகராஜ்(30) என்பது தெரியவந்தது. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கோகிலா(35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கோகிலாவை பிடித்து விசாரித்தனர். அதில் கோகிலா, நாகராஜ் தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கோகிலா, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு 2மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், நாகராஜிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த நாகராஜ், என்னை கண்டித்து வெங்கடேசனுடனான தொடர்பை கைவிடுமாறு கூறி வந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதற்கிடையே நாகராஜ், எனது மகளை அடைய திட்டமிட்டார். மேலும் எனது மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து வந்தார். அதேபோல் கடந்த 14ம் தேதி இரவு எனது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதுதொடர்பாக எனக்கும், நாகராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அருகில் இருந்த கல்லை எடுத்து நாகராஜ் தலையில் போட்டேன்.

இதில் நாகராஜ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் வெங்கடேசனை வரவழைத்து, நாகராஜின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டோம். போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>