டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடக்கும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘ஏற்கனவே அறிவித்தப்படி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்,’ என்று விவசாய சங்கங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில்  போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், மத்திய அரசுடன் இதுவரை 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அவை தோல்வியில் முடிந்தன. நாளை 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணியை நடத்தப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் நிலையில், இந்த பேரணிக்கு தடை விதிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘திட்டமிட்டப்படி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடக்கும். எங்களின் போராட்டம், 2024ம் ஆண்ட மே மாதம் வரை நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார். அதே நேரம், டெல்லியில் நேற்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் அளித்த பேட்டியில், ‘‘விவசாய சங்கங்களுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில், வேளாண் சட்டங்கள் ரத்து கோரிக்கையை தவிர, வேறு ஏதாவது இருந்தால் விவசாய சங்கங்கள் கூறலாம்.,’’ என்றார்.

Related Stories:

>