வியாசர்பாடி சாஸ்திரி நகரில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளால் குடியிருப்புவாசிகள் அவதி

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை 4வது மண்டலம் 36வது வார்டில் வியாசர்பாடி சாஸ்திரி நகர் உள்ளது. இங்கு 18வது தெரு மற்றும் 19வது தெருவில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நான்கு பேர் சேர்ந்து சிறிய அளவில் தெருவில் மீன் விற்று வந்தனர். காலப்போக்கில் அந்த இடம் மீன் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மீன் மார்க்கெட்டாக தற்போது மாறியுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் தற்போது அங்கு மீன் கடை நடத்தி வருகின்றனர். 20 அடி கொண்ட அந்த சாலை தற்போது மீன் மார்க்கெட் பகுதி ஆக்கிரமிப்புகளால் 5 அடியாக சுருங்கி உள்ளது.

மேலும் அந்தப் பகுதியில் மீன் வாங்கிக்கொண்டு ஒவ்வொரு வீடுகளில் வெளியே அமர்ந்து மீன்களை சுத்தம் செய்து தருவதற்காக ஆட்கள் அமர்ந்துள்ளனர். அவர்கள் அந்த மீன்களை சுத்தம் செய்து மீன் கழிவுகளை ஆங்காங்கே போட்டுவிடுகின்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஆரம்பத்திலேயே இங்கு மீன் கடைகள் வைக்கக்கூடாது என வலியுறுத்தினோம். ஆனால் எங்களை மிரட்டி 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதுகுறித்து கடந்த பல வருடங்களாக முதல்வரின் தனிப்பிரிவு தலைமை செயலாளர், கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2012ம் ஆண்டு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் மீன் மார்க்கெட் அமைப்பதற்காக ரூ.89.60 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கோப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. தற்போது சாஸ்திரி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைத்தால் தற்போது இந்த மூன்று தெருக்களில் உள்ள பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை புதிய மீன் மார்க்கெட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.

Related Stories: