கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக வாக்காளர் தகவலை வழங்க தேர்தல் ஆணையம் சம்மதம்: ரகசியம் காக்கும்படி நிபந்தனை

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, தன்னிடம் உள்ள வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள தேர்தல் ஆணையம் சம்மதித்துள்ளது. நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.  முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி  போடப்படுகிறது.  இந்நிலையில், தடுப்பூசி போடும் பணிக்கு பயனாளர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் ஆணையத்தின் உதவியை மத்திய சுகாதார துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில், 50 வயதுக்கு மேற்பட்டோரை அடையாளம் காண்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் உள்ள வாக்காளர் தகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டது.

இது பற்றி பரிசீலித்த தேர்தல் ஆணையம், கடந்த 4ம் தேதி உள்துறை செயலருக்கு பதிலளித்து கடிதம் எழுதியது. இதில், ‘கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.  

அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தடுப்பூசி போடும் பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி போடும் பணி முடிந்ததும், தேர்தல் ஆணையத்தின் தகவல் ரகசியங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதை தொடர்ந்து, சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், 50 வயதுக்கு மேற்பட்டோரை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

Related Stories: