புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் நியமித்த 4 பேர் குழுவில் ஒருவர் விலகல்: விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட் நியமித்த 4 பேர் குழுவில் ஒருவர் விலகி உள்ளார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதல் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.  இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 4 உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்தது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவானது, மத்திய அரசுக்கு ஆதரவான குழு என்று விவசாய அமைப்புகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ‘இந்த குழு முன் ஆஜராகமாட்டோம்; விவசாய சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும்’ என்று விவசாய அமைப்புகள் அறிவித்தன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் ஷெட்கரி அமைப்பின் தலைவர் அனில் கன்வத், தெற்காசியாவின்  சர்வதேச உணவு  கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரமோத் ஜோஷி,  விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, இந்திய விவசாயிகள் சங்கத்தின்  தேசியத் தலைவர் பூபிந்தர் சிங் மான் ஆகிய 4 பேர் கொண்ட நிபுணர் குழு  அமைக்கப்பட்டது. அதில், இந்திய விவசாயிகள் சங்க தேசியத் தலைவர்  பூபிந்தர் சிங் மான் (81), உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து  விலகுவதாக திடீரென அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘விவசாயிகளின் நலன்களில் எவ்வித சமரசம் செய்ய மாட்டேன். அதனால்,  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து விலகுகிறேன். நான்  பஞ்சாப் மற்றும் விவசாயிகளுடன் துணை நிற்பேன்’ என்று அறிவித்தார். இவரது  விலகல் குறித்து காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா கூறுைகயில்,  ‘பூபிந்தர் சிங் மானின் முடிவை வரவேற்கிறோம். நிபுணர் குழுவின் மற்ற மூன்று  உறுப்பினர்களும் விரைவில் விலகுவார்கள் என நம்புகிறோம்’ என்றார்.

இதற்கிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பிற்பகல் தொடங்கி 9ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. முன்னதாக இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய வேளான் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேச தயாராக உள்ளோம். இதில் சாதகமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், ‘குடியரசு தினமான வரும் 26ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

குடியரசு தினத்தன்று செங்கோட்டையிலிருந்து இந்தியா நுழைவாயில் வரை விவசாயிகள் ஒன்றுகூடி போராடுவார்கள். நாங்கள் அமர் ஜவான் ஜோதி பகுதியில் கொடியை ஏற்றுவோம். வீரர்கள் செங்கோட்டையில் இருப்பார்கள். இது ஒரு வரலாற்றுக் காட்சியாக இருக்கும்’ என்றார். ஆனால்,  குடியரசுத் தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்துவது தொடர்பாக  விவசாய சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர்  டிராக்டர் பேரணி நடத்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு  பிரிவினர் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக  குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>