சந்திராபூரில் மது தடையால் ஏற்பட்ட தாக்கம் என்ன? ஆய்வு செய்ய 13 பேர் குழு அமைத்தது மாநில அரசு

சந்திராபூர்: சந்திராபூர் மாவட்டத்தில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்தில் மது விற்பனை செய்யவும், மது அருந்த தடையும் விதித்து முந்தைய பாஜ அரசு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உத்தரவிட்டது. இதே போல் வார்தா மற்றும் கட்சிரோலியிலும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வட்டேடிவர் சந்திராபூரில் மதுவுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அய்வு செய்ய 9 பேர் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அந்த குழு கடந்த செப்டம்பரில் தங்களது அறிக்கை சமர்பித்தது.

இதில் சந்திராபூரில் போலி மது விற்பனை காரணமாக கிட்னி மற்றும் கேன்சர் பாதிப்பு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது தெரியவந்தது.  இதையடுத்து மது விற்பனைக்கான  தடையை நீக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மகாராஷ்டிரா அரசு சந்திராபூரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் முதன்மை செயலாளர் ராம்நாத்ஷா உள்ளார். இந்த குழு பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்டோரிடம் மதுவிலக்கு தொடர்பாக கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும்.

Related Stories: