செங்கல்பட்டில் சமத்துவ பொங்கல் விழா சென்னை புறநகர் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேச்சு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஆராமுதன், மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம், கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் டி.மூர்த்தி, அன்புச்செல்வன் அகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஆர்.ராஜி வரவேற்றார்.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை துவங்கி வைத்தனர். பின்னர், செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு அரிசி,வெல்லம், கரும்பு முந்திரி, பாத்திரம், திராட்சை, மஞ்சள், வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கினர்.அப்போது, மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், அதிமுக ஆட்சி முடிய இன்னும் 2 அமாவசைகள்தான் உள்ளது. நீட்தேர்வை கொண்டு வந்து, ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை மத்திய மாநில அரசுகள் கெடுத்துவிட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய சென்னை புறநகர் பகுதிகளில் குப்பை கழிவுகள், கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளை கலெக்டர் பார்வையிடுவதில்லை.

இதே நிலை நீடித்தால் கலெக்டரை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் விரைவில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் ஆயா வேலை தொடங்கி கண்டக்டர், டாக்டர் வரை அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன் நடக்கிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கொள்ளையடித்த அதிமுவினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதில், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. குறிப்பாக, செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போலீசாரின் உதவியோடு, கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்றார். முடிவில் மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories: