பையப்பனஹள்ளியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பெங்களூரு: பழைய பையப்பனஹள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெங்களூரு பழைய பையப்பனஹள்ளி (ஐசலேசன்) பகுதியில் மாருதிசேவாநகர் செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.  சாலை மூடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பழைய பையப்பனஹள்ளி ரயில்வே தண்டவாளம் வழியாக மாருதிசேவாநகருக்கு சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நோயாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதனால் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ``மாருதிசேவாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஐசலேசன் பஸ் நிலையத்துக்கு, எம்.ஜி.ரோட், மெஜஸ்டிக் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வந்தோம். இவ்வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டது. எனவே ஐசலேசன் செல்ல வேண்டும் என்றால் பழயை பையப்பனஹள்ளி வழியாக சென்று பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் ஏழை, எளிய மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அதே போல் மாலை நேரத்தில் இவ்வழித்தடத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறது.

இதனால் பெண்கள் தனிமையில் செல்ல முடியாத நிலை உள்ளது.  சாலை முழுமையாக மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இதில் மழை நேரத்தில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இத்துடன் சில நேரங்களில் ரயில்வே கேட் போடப்படுவதால் ரயில் கடந்து செல்லும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வருடங்களாக நடந்து வரும் மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்தால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கும். இதனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்’’.

Related Stories: