தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை ஜூலை 19-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி மேனகா உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானது. மத்திய அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்தால் அரசு இயந்திரம் பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய அரசு அதிகாரியைக் கைது செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம், வீடுகளிலும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் உள்ளது. மத்திய அரசு அதிகாரி கைதுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை மீது நடவடிக்கை கோருவது ஏற்கத்தக்கது அல்ல என தெரிவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்ந்த வழக்கை ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: