பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் தொடங்கியது சொந்த ஊர் செல்ல 11ம் தேதி வரை 90,000 பேர் முன்பதிவு: கூட்ட நெரிசலை குறைக்க 5 பஸ் நிலையங்கள்; நாளையும், நாளை மறுநாளும் கூட்டம் அதிகரிக்கும்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று தொடங்கியது. பல்வேறு தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இதுவரை 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளை, நாளை மறுநாள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் 5 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வரும் 14ம் தேதி பொங்கல் வருகிறது. இதையொட்டி இன்று முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்குவதாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

இன்று முதல் வரும் 13ம் தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,228  பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சம்மந்தப்பட்ட மூன்று நாட்களுக்கு 5,993  சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவோரின் வசதிக்காக 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளில் பயணிப்பதற்காக இதுவரை 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று காலை முதல் படிப்படியாக பயணிக்க துவங்கிவிட்டனர்.

* எம்டிசி சார்பில் இணைப்பு பஸ்

மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இயக்கப்படும்.

Related Stories: