பாகிஸ்தான் அணி பேரழிவை நோக்கி செல்கிறது: சோயிப் அக்தர் விரக்தி

ஆசிய கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளில் மிகவும் பலமான அணியாக வலம் வந்தது பாகிஸ்தான். வெளிநாடுகளிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் போன்றவர்கள் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வண்ணம் பந்துவீசி அலறவிட்டுள்ளனர். ஆனால் போதாத காலமோ என்னவோ தற்போதைய பாகிஸ்தான் அணி நிலையற்ற ஸ்திரத்தன்மையின்றி காணப்படுகிறது. சிறப்பான சில வீரர்கள் இருந்தாலும் மேற்கண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் அணியை விட்டு சென்ற பின் அந்த அணி திணறியே வருகிறது.

இதற்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை அந்த அணி உருவாக்க தவறிவிட்டதே காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுபோல் சையத்அன்வர், அமீர்சொகைல், இன்சமாம் உல் ஹக், மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான், முகமதுயூசுப் போன்ற பேட்ஸ்மேன்கள் சென்றதும் சாகித்அப்ரிடி, அப்துல்ரசாக் போன்ற அதிரடி ஆல்ரவுண்டர்கள் ஓய்வுபெற்ற பின் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாதது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் நியூசிலாந்து சென்றிருந்த பாகிஸ்தான் டெஸ்ட் அணி 0-2 என படுதோல்வியடைந்தது. 2-வது டெஸ்டில் 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து, இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் மாஜி வேகம் சோயிப் அக்தர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் ‘‘நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது மிகவும் மோசம். துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் அணி மிகமிக  மோசமான சூழ்நிலையில் உள்ளது. தரவரிசையில் நாம் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதைப்பார்த்தால் நாம் பேரழிவு சூழ்நிலையை நோக்கி செல்கிறோம். இப்படியே சென்றால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உலக அணிகள் பாகிஸ்தானை அழைப்பதை நிறுத்தக்கூடும் எனப் பயப்படுகிறேன். ஏனெனில் உங்கள் அணியின் (பாகிஸ்தான்) தரம் சிறப்பாக இல்லை எனச் சொல்வார்கள். இது ஐசி்சி-யின் சட்ட வழிமுறையாகும்’’ என்றார்.

Related Stories: