பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு-சென்னையிலிருந்து இயந்திரம் வரவழைப்பு

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் இருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. ரூ.23.5 கோடியில் இதற்கான பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்யப்பட்டது. கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு பணிகள், ஆள் நுழைவு தொட்டிகள், கழிவுநீர் போக்கு குழாய்கள், வீட்டு இணைப்புக்கான குழாய் அமைக்கும் பணிகள், கழிவு நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.

ஒப்பந்தப்படி 2009ல் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் கட்ட பணியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கான பணி முடிவடைவதில் தொய்வு ஏற்பட்டதால் பணிகள் முடிவடையாமல் இழுபறி நீடித்தது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தொடர்பான பிரச்னை கடந்த 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது வரை திட்டப்பணிகள் முழுமையடைந்து செயல்பாட்டிற்கு வரவில்லை.

13 ஆண்டுகளாகியும் திட்டம் இழுபறியில் உள்ளதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர் நாற்றமும், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் உள்ளது. 27 வார்டுகளில் 22 வார்டுகள் ஒரு பிரிவாகவும் 5 வார்டுகள் ஒரு பிரிவாகவும், பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது இரண்டாவது பிரிவில் உள்ள 5 வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை செயல்பட்டு வருகிறது.

முதல் பிரிவில் உள்ள 22 வார்டுகளில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்த அடைப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சியில் இருந்து நாள் வாடகைக்கு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் அடைப்புகளை பம்ப் செய்து நீக்கி வருகிறது.

நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: நகராட்சி சார்பில் வீட்டு இணைப்பு கொடுப்பதற்கு முன்பே வீட்டு உரிமையாளர்கள் அவர்களாகவே இணைப்பு பணிகளை செய்ததால் பல இடங்களில் மண், கற்கள் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் சுமார் 60 இடங்கள் வரை அடைப்புகள் உள்ளன. சுமார் ஒரு மாதகாலம் இந்த இயந்திரம் மூலம் அடைப்புகள் நீக்கும் பணிகள் நடக்கும். அதன் பிறகு நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

Related Stories: