கொட்டும் மழையிலும் 42வது நாளாக போராட்டம்... 78 பேர் பலி... செவிசாய்க்காத மோடி : இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WorldSupportIndianFarmers ஹேஷ்டேக்!

டெல்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கொட்டும் மழையிலும் 42வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் இந்திய அளவில் #WorldSupportIndianFarmers என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடும் குளிரிலும் மழையிலும் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 42 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான குளிர், காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 78 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு ஏற்க மறுத்ததால் 7ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இருப்பினும் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். அதற்கு குறைந்த எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது ட்விட்டரிலும் குதித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில்,  #WorldSupportIndianFarmers ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து, விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் ஆகிய நாடுகளில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணிகள், போராட்டங்கள் நடைபெற்ற வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளை காப்பதற்கு மறுபுறம் போராடி வருவது பாஜக அரசின் மீது பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: