சிவசேனா எம்பியின் மனைவி விவகாரம்; கடன் கொடுத்தவரின் ரூ72 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: சிவசேனா எம்பியின் மனைவிக்கு கடன் கொடுத்தவரின் ரூ72 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்ட பஞ்சாப் - மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் 4,300 கோடி வாராக் கடன் விவகாரத்தில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பிரவீன் ராவத் என்பவர் மேற்கண்ட வங்கியில் 95 கோடி ரூபாய் கடன்  வாங்கியதாகவும், அந்தத் தொகையில் தமது மனைவி மாதுரியின் கணக்கில் 1.95 கோடி ரூபாய் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மாதுரி வங்கிக் கணக்கில் இருந்து வட்டி இல்லாத கடனாக 55 லட்சம் ரூபாய் தொகையை, சிவசேனா தலைவரின் மனைவி வர்ஷாவின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத்தின் மனைவியை விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர் தனது உடல் நலத்தைக் காரணம் காட்டி வரும் 5ம் தேதி வரை காலஅவகாசம் கோரியுள்ளார்.

இந்நிலையில், வர்ஷாவிற்கு பணம் கடனாக கொடுத்த பெண்ணின் கணவருக்கு சொந்தமான 72 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. இவ்விவகாரம் குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், ‘எனது மனைவி எந்த தவறும் செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: