உயரமான பாரம் ஏற்றி வரும் லாரிகளால் மின் ஒயர்கள் துண்டிக்கப்படுவதால் உமி லாரியை சிறை பிடித்த கிராம மக்கள்: போலீசார் சமரசம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே உயரமாக உமி பாரம் ஏற்றி வரும் லாரிகளால் மின் ஒயர்கள் துண்டிக்கப்படுவதாக கூறி நேற்று விநாயகபுரம் கிராமத்தினர் லாரியை சிறை பிடித்தனர். ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 40க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் செங்கலை சுடுவதற்காக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உமி கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு லாரிகளில் கொண்டு வரப்படும் உமி மூட்டைகள் விதிமுறைகளுக்கு முரணாக மிக உயரமாக அடுக்கி கொண்டு வரப்படுகின்றன. இதனால் சாலையில் செல்லும் போது விநாயகபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் சாலையில் உள்ள வீட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் லாரி உரிமையாளர்கள், செங்கல் சூளை நடத்துவோர் யாரும் உரிய பதில் தருவதில்லை. இதனால் கிராம மக்கள் அடிக்கடி மின் இணைப்பு இல்லாத நிலையில் இருட்டில் வீட்டில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், நேற்று அப்பகுதிக்கு தர்மபுரியில் இருந்து உமி ஏற்றி லாரி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர். அப்போது உயரமான பாரம் காரணமாக தங்கள் வீட்டின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி லாரியை அப்பகுதியினர் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த உம்ராபாத் போலீசார் லாரியை பொதுமக்களிடம் சமரசம் பேசி விடுவித்தனர். பின்னர், அதிக பாரம் ஏற்றி வந்தால் லாரி அப்பகுதியில் அனுமதிக்க இயலாது என போலீசார் எச்சரித்து லாரியை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: