சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சி: ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம்: பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் இ.பாஸ் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. இதைக் கண்டித்து கோயில் தீட்சிதர்கள், பக்தர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்து முடிந்தது. புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை முதலே களை கட்டியது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த நடராஜர், சிவகாமசுந்தரிக்கு நேற்று அதிகாலை மகாஅபிஷேகம் நடந்தது. பல்வேறு பூஜைகளுக்கு பிறகு மாலை 5 மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கைகளை தட்டியபடி சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் நேற்று நடராஜர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: