அதிமுகவை வீழ்த்தும் அறிகுறி தெரிகிறது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: அதிமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான பிரகாசமான அறிகுறி தென்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உடல்நலனை கருத்தில்கொண்டு கட்சி தொடங்க போவதில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டார். இது ரஜினியை வைத்து அரசியல் நடத்தி ஆதாயம் பெறலாம் என்ற உள்நோக்கத்தில் ஈடுபட்ட சில சுயநலமிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் விலகுவதாக ரஜினி கூறவில்லை என்று பத்திரிகையாளர் குருமூர்த்தி சப்பைக் கட்டு கட்டுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. முடிவெடுக்க வேண்டியவர் முடிவெடுத்துவிட்டார். எனவே, ரஜினியை அரசியலில் நுழைத்து தமிழக பாஜவை தமிழ் மக்களிடம் விற்பனை செய்து விடலாம் என்கிற அணுகுமுறைக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. தமிழக பாஜ கொள்கையை சொல்லி கட்சியை வளர்க்காமல் மதவாத அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவு படுத்தலாம் என்று கனவு கண்டது.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுப்கோப்பாக, கொள்கை சார்ந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டணியாக பீடு நடைபோட்டு வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கான பிரகாசமான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: