கர்நாடகா, தெலங்கானா உட்பட நாடு முழுவதும் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த நூற்றுக்கணக்கானோர் தலைமறைவு: வீரியமிக்க கொரோனா பரவும் அபாயம் சுகாதாரத் துறை, போலீசார் வலைவீச்சு

புதுடெல்லி: இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அங்கிருந்து நாடு திரும்பிய நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை சுகாதாரத் துறையினர், போலீசாரும் வலைவீசி தேடி வருகின்றனர்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது இங்கிலாந்தில் அபாயகரமாக உருமாற்றம் அடைந்துள்ளது. தற்போதுள்ள கொரோனாவை விட இது, 70 சதவீதம் வேகமாக பரவுகிறது.

இதனால், இங்கிலாந்து உடனான விமான சேவையை கடந்த 22ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரத்து செய்து, அந்நாட்டை தனிமைப்படுத்தி உள்ளன. வீரியமிக்க இந்த புதிய வைரசுக்கு ‘VUI 202012/01’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த மாதம் 25ம் தேதி முதல் கடந்த 22ம் தேதி வரையில் இந்தியா திரும்பிய பயணிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு புதிய கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய முழுவீச்சில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் மாநில சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த ஞாயிறன்று இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 59 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், அந்நாட்டில் இருந்து திரும்பிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு புதிய வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை அறிய, இவர்களின் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து திரும்பிய தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், இந்த பரிசோதனைக்கு பயந்து தலைமறைவாகி இருக்கின்றனர். இவர்களால் புதிய வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து சில தினங்களுக்கு முன் தெலங்கானாவுக்கு 279 பயணிகள் திரும்பினர். அவர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதார துறையினர் முயன்றனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இது தொடர்பாக இம்மாநில போலீசார் கூறுகையில், ‘184 பயணிகள் தவறான செல்போன் எண், முகவரியை கொடுத்துள்ளனர். 92 பேரை கண்டறிய முடியவில்லை. இவர்கள் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்,’ என்றனர்.

தெலங்கானா சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீனிவாசா கூறுகையில், ‘‘இங்கிலாந்தில் இருந்து திரும்பி அடையாளம் காணப்பட்ட 1,216 பேரில் 937 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. அது, புதிய வைரசா என்பதை கண்டறிய புனே ஆய்வகத்துக்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன,” என்றார். இதேபோல், கர்நாடகாவில் கடந்த மாதம் 25 முதல் இம்மாதம் 22ம் தேதி வரையில் இங்கிலாந்தில் இருந்து 2,500 பேர் வந்துள்ளனர்.

அவர்களில் 1,638 பேருக்கு  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 14 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுக்கும் புதிய வைரஸ் தாக்கியதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு திரு்ம்பிய 151 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களில் செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதார துறையினரும், போலீசாரும் தேடி வருகின்றனர்.

உருமாற்றம் இயற்கையானது

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் நேற்று அளித்த பேட்டியில், “வைரஸ் உருமாற்றம் அடைவது இயற்கையானது. கொரோனாவுக்கும் இதுபோன்ற உருமாற்றம் வரும் என்பது எதிர் பார்த்ததுதான். ஆனால், இது பற்றி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில், ‘புதிய வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது,’ என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் கிடைக்கவில்லை,’’ என்றார்.

Related Stories: