மக்கள் கிராம சபை கூட்டம் தொடர்ந்து நடக்கும் அதிகார பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும். அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது:  டிசம்பர்  23 அன்று 1100 என்ற அளவில் நடந்த கிராம-வார்டு சபைக் கூட்டங்கள், 24 அன்று 1600-க்கும் அதிகமாக நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் மக்கள்-ஆடவர், பெண்டிர், இளையோர், முதியோர் வந்து கூடுகிறார்கள்.  ஆட்சியின் அவலத்தைப் பற்றிக் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள். முதல் இரண்டு நாட்களிலேயே இத்தனை வரவேற்பு என்றால், இன்னும்  ஜனவரி 10 வரை இந்த ஊராட்சிக் கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக திமுக  கூட்டணி நோக்கியே சென்றுவிடக் கூடும் என்ற அச்சம், அதிமுக ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது.  200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அனைத்து அமைச்சர்களில்  ஒருவரும் வெற்றிபெறக்கூடாது என்பது திமுக இரண்டாவது இலக்கு.

இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதல்வரான எடப்பாடி பழனி சாமிக்கு ஒரே நாளில் உறக்கம்  நிரந்தரமாகக் கலைந்து விட்டது.  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமசபை என்ற பெயரைப் பயன்படுத்தி  அரசியல் கட்சிகளும் தனியாரும் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என டிசம்பர் 24-ம் தேதியன்று பொழுது சாய்ந்தபிறகு அறிக்கை வெளியாகிறது. இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு  கட்டிக் கொண்டதா? அரசு சார்பில், முழுமையான அளவில், எல்லா அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திராணியின்றி, தேர்தல் நடைபெற்ற ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்களை நடத்தும் வக்கின்றி வழியின்றிப் போன  ஆட்சியாளர்கள், திமுகவினர் மக்களைச் சந்தித்தால்-அனைத்துக் கிராமங்களிலும் அதற்குப் பேராதரவு பெருகினால், தொடை நடுங்கி, தடை போடுவதா?

 கிராம சபைக் கூட்டம் என்பது இனி, மக்கள் சபைக் கூட்டம் என்ற  பெயருடன் தொடர்ந்து நடைபெறும் என்பதை அறிவித்திருக்கிறேன். அறிவிப்போடு நின்றுவிடவில்லை. மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் வார்டுசபைக்  கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் அன்பான வரவேற்பினை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த கருத்துகளைக் கேட்டறிந்தேன். ஜனவரி 10 வரை, 16,500 ஊராட்சிக் கூட்டங்களை நடத்தி  நிறைவேற்றும்வரை இது நிச்சயமாகத் தொடரும்.  அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி திமுகவை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் தி.மு.க.வை சீண்டிப் பார்க்க  வேண்டாம். திமுகவின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், திமுகவின் மக்கள் கிராமசபைக்  கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: