செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிமுறை மீறிய 170 வாகனங்கள் பறிமுதல்; ரூ. 2.80 லட்சம் அபராதம்: அதிகாரிகள் அதிரடி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,  போக்குவரத்து ஆய்வாளர்கள்  கார்த்திக், விஜயா, ஆனந்த்  ஆகியோர் அடங்கிய அதிகாரிகள்  செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது,  விதிமீறி அதிக பாரம் ஏற்றிவந்தது, ஷேர்ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி வந்தது,  வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வந்தது, சொகுசு கார், சரக்கு வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர்  பொருத்தி இருந்தது என 170  வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,” செங்கல்பட்டு  மாவட்டத்துக்கு உட்பட்ட  செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, செய்யூர், அச்சரப்பாக்கம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாகன தணிக்கை  செய்யப்படும். எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தப்பட்டு  இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை கழற்றப்படும். அபராதமும் விதிக்கப்படும். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதால் விபத்து நேரத்தில் வாகனங்களில் உள்ள சென்சார்  வேலை செய்யாமல் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

Related Stories: