காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் குப்கர் மக்கள் கூட்டணி 110 இடங்களில் வெற்றி: பாஜ. 75, காங். 26 இடங்களை கைப்பற்றின

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அதன் பிறகு, முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் தீர்மான மக்கள் கூட்டணியில் போட்டியிட்ட 7 கட்சிகள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இக்கூட்டணியில் அதிகப்பட்சமாக தேசிய மாநாட்டு கட்சி 67 இடங்களையும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 27 இடங்களையும் பிடித்துள்ளன. தனித்து போட்டியிட்ட பாஜ. முதல் முறையாக 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 26 இடங்களை கைப்பற்றி 4வது இடத்துக்கு த ள்ளப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், சுயேச்சை வேட்பாளர்கள் 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அவர்கள் கிங் மேக்கர்களாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இனி தேர்தலில் நிற்க மாட்டேன்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறுகையில், ``காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் மக்கள் ஒட்டு மொத்தமாக குப்கர் தீர்மான மக்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். இது காஷ்மீர் மக்கள் இன்னும் 370வது சிறப்பு பிரிவை மறக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்து கூறுவதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். சட்டப்பிரிவு 370 ரத்து உத்தரவு திரும்ப பெறப்படும் வரை, இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்,’’ என்றார்.

Related Stories: