டிசம்பர் மாதம் மட்டும் உதவி பொறியாளர்களுக்கு பழைய சம்பளம்: அரசு துறை செயலாளர்களுக்கு நிதித்துறை உத்தரவு

சென்னை: உதவி பொறியாளர்களுக்கு டிசம்பர் மாதத்தில் பழைய ஊதியம் வழங்கலாம் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, மீன்வளம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரம் உதவி பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில், சம்பளம் குறைத்து அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு உதவி பொறியாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை மாத ஊதியத்தில் இழப்பு ஏற்படுகிறது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் அனைத்து மறுசீரமைப்பு ஆணைகளுக்கும் தடை உத்தரவு வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கை ஜனவரி  18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே டிசம்பர் மாத ஊதியத்தை குறைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் வழங்க வேண்டும் என்று துறைத்தலைவர்களுக்கு நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பணிகளில் அந்தெந்த துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, புதிய ஊதிய விகித்ததை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் டிசம்பர் மாதத்தில் பழைய ஊதியம் வழங்கலாம்.

மேலும், ஜனவரி மாதம் 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதால், அதற்கேற்ப அந்த சமயத்தில் முடிவு எடுத்து கொள்ளலாம் என்று அனைத்து துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பழைய சம்பளமே கிடைக்கும்.

Related Stories: