கீழ்காவிரி வடிநில கோட்டத்தில் தூர்வாரும் பணியில் பல கோடி மோசடி: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

தஞ்சை:  தஞ்சை கீழ்காவிரி வடிநில கோட்டத்தில் தூர்வாரும் பணியில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தால் அம்பலமானது. தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளர் போர்வாள் அளித்த பேட்டி: நடப்பாண்டில் (2020-21) காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் இப்பணிகளுக்கான டெண்டர் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின்னரே விடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவலில் இது தெரிய வந்துள்ளது. கீழ்காவிரி வடிநில வட்டத்தில் சுமார் 300 பணிகளில் இந்த மோசடி நடந்துள்ளது.  இப்பணிகள் முறையாக நடந்திருந்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்காது. ஆண்டுதோறும் இதேபோல் திட்டமிட்டே மக்களின் வரி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும், டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. டெண்டர் விட்டதே ஜூன் 25, 30ம் தேதிகளாகும். இந்நிலையில் அன்றைய தேதிகளில் பணிகள் மேற்கொள்ள இருந்த ஆறு, வாய்க்கால்கள், ஏரிகளில் தண்ணீர் வந்துவிட்டது. தண்ணீர் ஆற்றில் ஓடும்போதே பணிகள் நடைபெற்றதா? என்பதை விளக்க வேண்டும்.

அதுவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பணிகள் நடந்ததற்கான புகைப்படங்கள் கொண்ட பதிவேட்டை (எம்.புக்) வழங்க மறுக்கின்றனர். இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தெளிவாகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து கல்லணை கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன் கூறுகையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய ஜூன் மாதம் இறுதியாகிவிடும். மேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது சின்ன சின்ன பணிகள் என்பதால் ஓரிரு நாளில் அந்த பணிகள் முடிந்து விடும். முடிக்க முடியாத பணிகளை மேட்டூர் அணையை மூடிய பின்னர் செய்து முடித்து விடுவோம். எனவே இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றார்.

Related Stories: