மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு ஈமச்சடங்கு செய்த விவசாயிகள்: செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, உளுந்து மற்றும் வாழை பயிரிடப்பட்டது. நிவர் மற்றும் புரெவி புயல் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.  2 வாரங்களுக்கு மேலாகியும், வேளாண்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறையினரோ பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடவில்லை, பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதனால், செய்யாறு அடுத்த நாவல் கிராமத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு,  ஊர்வலமாக எடுத்து சென்று அங்குள்ள நீர்நிலையோரம் 18ம்நாள் காரியம் நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட வசதியாக ஓடை வழியாக காகித கப்பலை விட்டனர்.

Related Stories: