அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஈரோடு: அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: சுமார், 2,400 அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை என பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இப்பள்ளிகள், பல ஆண்டுகளுக்கு முன், ஊரகப்பகுதிகளில் கட்டப்பட்டவையாகும். அப்பள்ளிகளிலும், படிப்படியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும். புதிதாக கட்டப்படும் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 தனியார் பள்ளிகள் விரும்பினால், ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம்.  கொரோனா பிரச்னை காரணமாக, 9ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதால், அந்த வகுப்பிற்கு மட்டும் 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிக்கை வெளியிடப்படும். இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: