கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையை எதிர்த்து விவசாய சங்கத்தினர் போராட்டம்: கலெக்டரிடம் மனு அளித்தனர்

சிக்கமகளூரு: கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி போராட்டக்குழுவினர் மற்றும் விவசாய சங்கத்தினர்  கலெக்டரிடம் மனு அளித்தனர். சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி மற்றும் தரிக்கெரே ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கை எதிர்ப்பு குழுவினர் ஆசாத் பூங்காவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் விஜயகுமார் கூறுகையில்,

பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு பயன்படுத்தி வரும் அரசு நிலங்களை விவசாயிகளிடமிருந்து அரசு திரும்ப பெறும் வகையில் கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது கிராம பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம்.

தற்போது ஆய்வறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. உடனடியாக கஸ்தூரி ரங்கன் ஆய்வறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் மாவட்டம் முழுவதும் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். சிக்கமகளூரு மல்லந்தூர் சாலை, மூடிகெரே சாலை மற்றும் எம்.ஜி.ரோடு வழியாக பேரணியாக சென்று ஆசாத் பூங்கா அருகே போராட்டம் நடத்திய குழுவினர் மாவட்ட கலெக்டர் பகாதி கவுதமிடம் மனு அளித்தனர்.

Related Stories: