இ-மெயில் வழக்கு குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்: உங்கள் அழுகையை எப்போது நிறுத்துவீர்கள்?: ஹிருத்திக் மீது முன்னாள் காதலி கங்கனா காட்டம்

மும்பை: ஹிருத்திக் ரோஷனுக்கு இமெயில் அனுப்பிய விவகாரத்தில், அவர் எப்போது தனது அழுகையை நிறுத்துவார்? என்று அவரது முன்னாள் காதலி கங்கனா கருத்து தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது முன்னாள்  காதலர் என்றும், காதலை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்கச் சொல்லியதால் அவரை  விட்டு விலகியதாக கடந்தாண்டு பாலிவுட் நடிகை கங்கனா கூறியிருந்தார். இதற்கு முன்னதாக கடந்த 2013 - 14ம் ஆண்டுகளில், கங்கனாவின்   மின்னஞ்சல் ஐடியிலிருந்து (இமெயில்) நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள், அவரது முன்னாள் காதலரான ஹிருத்திக் ரோஷனுக்கு அனுப்பப்பட்டதாக  புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஹிருத்திக் ரோஷன் 2017ல் மும்பை போலீசில் கங்கனா மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார்  அடையாளம் தெரியாத நபர்கள் என சிலர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  அப்போது கங்கனா தரப்பில், ‘எனது மின்னஞ்சல் ஐடி  ஹேக் செய்யப்பட்டது. நான் ஹிருத்திக்  ரோஷனுக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சைபர் கிரைம்  போலீசார் விசாரித்து வந்த  வழக்கானது, குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மும்பை இணை போலீஸ் கமிஷனர் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஹிருத்திக் ரோஷனின் எஃப்.ஐ.ஆர் தொடர்பான விபரங்கள் சைபர் கிரைம் பிரிவில் இருந்து குற்ற புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.யு)  மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி, கங்கனா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், ‘சோகமான அந்த கதை மீண்டும்  தொடங்கியது. நாங்கள் பிரிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம்  நம்பிக்கையுடன் எனது தைரியத்தை  மீட்டெடுக்கும் போது, அவர் (ஹிருத்திக் ரோஷன்)  மீண்டும் அதே நாடகத்தைத் தொடங்குகிறார்.

ஒரு சிறிய விவகாரத்திற்காக அவர் இன்னும் எவ்வளவு  காலத்திற்கு அழுவார். அவரது அழுகையை எப்போது நிறுத்துவார்?’ என்று பதிவிட்டுள்ளார். ஹிருத்திக் - கங்கனா காதல் முடிவுக்கு வந்தாலும், பல நேரங்களில் சமயம்  கிடைக்கும்போதெல்லாம் ஹிருத்திக்கை மறைமுகமாக கங்கனா  குற்றம்சாட்டி வருவார். அதேபோல், தற்போதும் அவர் வெளியிட்ட பதிவு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: