265 நாட்களுக்கு பிறகு இன்று குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தென்காசி: குற்றாலத்தில் 265 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  அதன்பிறகு பல கட்டங்களாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்ட போதும் குற்றாலத்தில் மட்டும் தடை நீக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுலாத்தலங்கள்  செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்ட  நிலையில் குற்றாலத்தில் ஒரு நாள் தாமதமாக இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க  அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் குளிக்க  அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி வீரபாண்டியன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், மற்றும்  சுகாதார துறையினர் மேற்கொண்டனர். காலை முதலே  அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அனைவரும் வரிசையில்  நிறுத்தப்பட்டு 20 நபர்களாக அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்தவர்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் முகவரிகள் பெற்று பதிவு  செய்து  கொண்ட பிறகு அனுமதித்தனர்.

மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைகளில் சானிடைசர் தெளித்து அனுப்பினர். சுற்றுலா  பயணிகள் காத்திருப்பதற்தாக சமூக இடைவெளி கட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது.  அருவியை சுற்றி பல பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து  தெளிக்கப்பட்டு இருந்தது. அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்வதற்காக சன்னதி பஜாரிலிருந்து  அருவிக்கு வரும் பாதைகள்  அடைக்கப்பட்டு வரவேற்பு வளைவு பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியை பொறுத்தவரை இன்று தண்ணீர் சுமாராகவே விழுந்தது. 265 தினங்களுக்கு பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதி  அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தந்தனர். வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில்  அதிகமானோர் ஐயப்ப பக்தர்கள் ஆவர்.

Related Stories: