விவசாயிகளுக்காக இலவச வலி நிவாரண மையங்கள்.. மருத்துவ முகாம்கள் : நல் உள்ளங்களின் மனிதாபிமான செயல்களால் டெல்லி போராட்டக்களத்தில் உத்வேகம்!!

டெல்லி : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்,  20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல், சாலை மறியல், சுங்கச்சாவடி முற்றுகை, பாரத் பந்த், உண்ணாவிரதம் என ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து.வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இலவச வலி நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர் போராட்டத்தால் கை,கால், மூட்டு வலியால் அவதிக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உரிய மருந்துகள் கொடுப்பதுடன், மசாஜ் மற்றும் உடற்பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் சிங்கு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நோய்வாய்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இதனிடையே லூதியானா தொழிலதிபர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு நோய் வாய்ப்பட்டிருக்கும் நபர்களுக்காக இரண்டு முறை மருந்து பொருள்களை வாங்கி அனுப்பி வருகின்றனர். இதேபோல், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தங்கியுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த டட் சகோதரர்கள் டெல்லி எல்லையில் தங்கியுள்ள விவசாயிகளுக்கு பாதாம் அனுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் அந்த சகோதரர்கள். இதுவரை 20 குவிண்டால் பாதாமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக அனுப்பியுள்ளனர்.ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த கின்னோ விவசாயிகள் விவசாயிகளுக்கு இலவசமாக பழங்களை வழங்குகிறார்கள்.

இதுபோக விவசாய சங்கங்கள், தன்னார்வலர்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையானவை கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. முடிந்தவரை தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் நிதி, உணவு பொருட்களை திரட்டி வருகின்றனர். விவசாயிகள், அவர்களுக்கு உதவுபவர்கள் உட்பட அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான். அது சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்பதே. அது நீக்கப்படுமா என்பது மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவிலேயே தெரியவரும்.

Related Stories: