பிஜிஎம்எல் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பால் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: மக்கள் கடும் அவதி

தங்கவயல்: தங்கவயல் தங்க சுரங்க தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் ஓடையாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.  தங்கவயல் நகரசபையின் செயிண்ட் மேரிஸ் வார்டை சேர்ந்த எஸ் பிளாக்கில் சாலையடியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், கழிவு நீர் நிரம்பி ஓடை போல் குடியிருப்பு பகுதிகளில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து அந்த பகுதி கவுன்சிலர் ஜெயந்தி ரமேஷ் கூறும் போது, ஒவ்வொரு மழை காலங்களிலும் இந்த பகுதியில் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவு நீர் தேங்கி மேலே வந்து குடியிருப்புகளுக்கு முன் ஓடுகிறது.

இது குறித்து நகரசபை தலைவர் மற்றும் கமிஷனர் ஆகியோருக்கு புகார் தெரிவித்தும் பயன் இல்லை. மேலும் நகரசபை பொறியாளரை நேரில் அழைத்து வந்து கழிவு நீர் அடைப்பை காட்டியும் நிலைமை சீரடையவில்லை. எம்.பிளாக், கார்பெண்டர் லைன், எஸ்.பிளாக் ஆகிய பகுதிகளின் கழிவு நீர் அனைத்தும் எஸ்.பிளாக்கில் தேங்கி மேலே வந்து ஓடுகிறது. கழிவு நீர் அகற்றும் இயந்திரம் கொண்டு கழிவு நீரை அகற்றினாலும், மீண்டும் இதே நிலை ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை நீக்கி சரி செய்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்’’ என்றார். கால்வாய் அடைப்பு காரணமாக சாலைகளில் ஓடும் கழிவு நீர் வீட்டுக்குள்ளும் புகுந்து விடுகிறது. கொரோனா நோய் தொற்று காலத்தில் இது போன்று கழிவு நீர் திறந்த வெளியில் ஓடுவதை நகரசபை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: