சின்னமனூர் நவீன குப்பைக் கிடங்கில் பல ஆண்டாக உரத்தயாரிப்பு பணி முடக்கம்: குப்பை தரம் பிரிப்பு இல்லை; தூங்கும் இயந்திரங்கள்

சின்னமனூர்: சின்னமனூர் நவீன குப்பைக் கிடங்கில் உரத்தயாரிப்பு பணி, குப்பை தரம் பிரிப்பு பணி பல ஆண்டாக முடங்கிக் கிடக்கிறது. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகரில் சேகரமாகும் குப்பைகளை, 25 ஆண்டுகளுக்கு மேலாக 3வது வார்டு சாமிக்குளம் குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர். அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்ததால், 27வது வார்டு அய்யனார்புரத்தில் கடந்த 2015ம் ஆண்டில் நவீன குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. இங்கு, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியும் நடந்தது.

இப்பணிகள் 4 மாதங்கள் மட்டுமே நடந்தது. அதன் பின்னர் எந்தப் பணியில் நடக்காமல் முடங்கிக் கிடக்கிறது. நகரில் சேரும் குப்பைகளை, நவீன குப்பைக் கிடங்கில் கொட்ட இடம் இல்லாமல், வெளியில் கொட்டி வருகின்றனர். இதனால், உள்ளே நுழைய முடியவில்லை. குப்பைக் கிடங்கில் பொருத்தப்பட்ட நவீன இயந்திரங்கள், மின்மோட்டார்கள் துருப்பிடித்து கிடக்கின்றன.

இதனால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, சின்னமனூரில் நவீன குப்பைக் கிடங்கில் குப்பை தரம் பிரிப்பு பணியும், உரத்தயாரிப்பு பணியும் நடக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: