முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் சங்க நிர்வாகிகள் நன்றி

சென்னை: பட்டியலினத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தார், கடையர், காலாடி, குடும்பர், பள்ளர், பண்ணாடி, வாதிரியார் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் பொது பெயரிட கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. இதை ஏற்று அதற்கான உத்தரவை அரசு விரைவில் பிறப்பிக்கும். இதற்கான மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணையைப் பெற உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மற்றும் தேவேந்திர சட்ட பாதுகாப்பு மையத்தலைவர் பாஸ்கர் மதுரம், தேவேந்திர குல மள்ளர் சேம்பர் ஆப் காமர்ஸ், மூவேந்தர் புலிப்படை, டி.கே.வி. சமூக வழக்கறிஞர்கள் பேரவை, தேவந்திரகுல வேளாளர் சமூக அரசு ஊழியர் நல சங்கம், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம், அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை, தேக்கப்பட்டி பாலசுந்தரராசு பேரவை, தேவேந்திரகுல சமூகம், தேவேந்திர வேளாளர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கே.மாணிக்கம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: