ஒரே ஆண்டில் இந்தியாவில் 1.16 லட்சம் குழந்தைகள் பலி: புகை பெரிசுகளுக்கு மட்டுமல்ல சிறுசுகளுக்கும் பகை தான்...டிசம்பர் 2 தேசிய மாசு தடுப்பு தினம்

போபால் விஷவாயு தாக்குதல் விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1984ம் ஆண்டு டிச.2ம் தேதி இரவு மற்றும் 3ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு வெளியேறியது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வந்த மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதோடு  2,500 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் கண் பார்வை, உறுப்புகளை இழந்தனர். இந்த விபத்து உலகளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாகும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசு தடுப்பு தினமாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

‘ஸ்டேட் ஆப் குளோபல் ஏர்’ என்கிற அமைப்பு காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு (2019) உலகில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி 2 நிறுவனங்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 60 லட்சத்து 70 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. காற்று மாசு அதிகம் பாதிப்பது ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வின் முடிவுகள், இந்தியாவில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள், சகாரா பகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் உள்பட உலகம் முழுவதும் 4 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள், பிறந்த ஒரே மாதத்தில் காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.

இந்தியாவில் நிகழும் மரணத்தில் 10.5% காற்று மாசால் ஏற்படுகிறது. வீட்டினுள் உருவாகும் சமையல் புகை உள்ளிட்ட காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள் கருவிலிருந்தே மாசுபட்ட காற்றை சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் குழந்தைகள் பிறக்கும் போது எடை குறைவாக இருத்தல், குழந்தைகள் உயிரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன. தற்போது வாகனப் பெருக்கம், மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு வகையான மாசுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் மற்றும் மனித நடவடிக்கைகளால் உண்டாகும் பலவிதமான மாசுகளால் காற்று மட்டுமின்றி நிலம், நீர், காடுகள் போன்ற இயற்கை வளங்களும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. நாம் உயிர்வாழ அவசியமான குடிநீர் மட்டுமின்றி சுவாசிக்கிற காற்றையும் காசு கொடுத்து வாங்கும் அவல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனித குலத்தின் பொருளாதார நிலையை உயர்த்த அவசியம் என்றாலும், அதனால் சுற்றுப்புற சூழல் மாசடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Related Stories: