அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு உள்ள கல்வித் தகுதி தமிழகத்தில் யாருக்கும் இல்லையா: திமுக கொள்கை பரப்பு செயலாளர் கேள்வி

காஞ்சிபுரம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பாவுக்கு உள்ள கல்வித் தகுதி தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லையா என திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் கேள்வி எழுப்பினார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தோடு திமுக சார்பில் தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், காஞ்சிபுரம் சென்றார். தொடர்ந்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்கள், நெசவாளர்களிடம் குறைகளை கேட்கும் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் பேசுகையில், கல்வியில் சீர்த்திருத்தம் செய்வதாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பாதிக்கும் வகையில் புதிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதிமுக அரசும் கண்மூடித்தனமாக இதனை ஆதரிக்கிறது. இந்திய அளவில் தமிழகம் கல்வி வளர்ச்சியில் 43.6 சதவிதம் உள்ளது. ஆனால் பாஜ ஆளும் குஜராத் உள்பட வடமாநிலங்களில் கல்வி வளர்ச்சி சதவீதம் 20 புள்ளிகள் என்ற அளவிலேயே உள்ளது. எனவே, கல்வி வளர்ச்சித் திட்டங்களை வடமாநிலங்களில் செயல்படுத்திக் கொள்ளட்டும். கல்வியில் சமூக நீதி காக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சூரப்பாவுக்கு உள்ள கல்வித் தகுதி தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லையா, திமுக இந்தி படிப்பதை எதிர்ப்பதாக கூறுகிறார்கள், அப்படி யாரும் சொல்லவில்லை, தாய்மொழியோடு சேர்ந்து எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். பத்தாம் வகுப்புவரை தாய்மொழிக்கல்வியில் படித்துவிட்டு அதற்குப் பிறகு எந்த மொழியில் வேண்டுமானாலும் மாணவர்கள் படிக்கலாம். அப்போதுதான் அறிவு விசாலமடையும் என்றார். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மாணவிகளின் படிப்புக்கு செல்போன்

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவி சக்தி பிரியா பேசுகையில், மருத்துவர் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அதற்காக தீவிரமாக படித்தேன். கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனாலும், பொருளாதார வசதி இல்லாததால் என்னால் மருத்துவப் படிப்பு படிக்க முடியவில்லை என்றார். திராவிடபிரியா என்ற மாணவி கூறும்போது, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் தேவை. ஆனால், தற்போது இருப்பதையும் பறிக்கும் விதமாக புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு என தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, எஸ்சி, எஸ்டி மாணவர்களை அரசு வஞ்சிக்கிறது என்றார்.

இதை தொடர்ந்து பெற்றோர் தரப்பில் பேசிய ஒரு விவசாயி, எனக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடக்கிறது. ஆனால், என்னிடம் ஒரு செல்போன் மட்டுமே உள்ளது. இதனால், 2 பேருக்கும் ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது யாராவது ஒருவர் மட்டுமே வகுப்பை கவனிக்க வேண்டியுள்ளது. மற்றொரு மகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது என வேதனையுடன் கூறினார்.இதையடுத்து மாவட்ட செயலாளர் க.சுந்தர், மேற்கண்ட 2 மாணவிகளுக்கும், தனது சொந்த செலவில் செல்போன் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: