தமிழக அரசின் அழுத்தம் காரணமாக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல் கட்சியில் இணைந்தார்

சென்னை: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று இணைந்தார். 1995ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு 2019 முதல்  டி.என்.எச்.டி.சி.எல் நிர்வாக இயக்குநராக இருந்தார். தகவல் தொழில்நுட்பத் துறையில் அரசாங்கத்தின் முதன்மை செயலாளராகவும் இருந்தார்.

பின்னர்  சந்தோஷ்  பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனில் ரூ.2 ஆயிரம் கோடி பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டருக்கு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அதிமுக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதை சந்தோஷ் பாபு ஏற்கவில்லை. இதையடுத்து அவர் விருப்ப ஓய்வு பெற்று பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் சந்தோஷ் பாபு இன்று இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை கமல்ஹாசன் வழங்கினார். பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக சந்தோஷ் பாபு நியமிக்கப்படுவதாக  கமல்ஹாசன் அறிவித்தார். இது குறித்து சந்தோஷ் பாபு கூறும்போது, ‘தமிழக அரசின் அழுத்தம் காரணமாகவே பதவியிலிருந்து விலகினேன். இப்போது நேர்மையான அரசியலை தர விரும்புகிறேன். இப்போதைய அரசியலில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது’ என்றார்.

பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறும்போது, ‘நேர்மையுடன் அர்ப்பணிப்பு குணத்துடன் பணியாற்றி, அரசின் அழுத்தம் காரணமாக பதவியை துறந்தவர் சந்தோஷ் பாபு. 6 மாதமாக யோசித்த பிறகு அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவரை போன்ற நேர்மையாளர்களின் வருகை கட்சிக்கு பலமாகும். சினிமாவில் நடிக்கும்போதே ரஜினியும் நானும் போட்டியாளர்கள். ஆனால் பொறாமை இருந்ததில்லை. இப்போது எனது கட்சிக்காக ரஜினியின் ஆதரவை கேட்பேன்’ என்றார்.

Related Stories: