தேசிய அளவில் ‘திடீர்’ கவனத்தை ஈர்த்துள்ள ஐதராபாத் மேயர் தேர்தல்; வாக்குப்பதிவு விறுவிறு: 1,584 பதற்றமான வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு

ஐதராபாத்: தேசிய அளவில் திடீர் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ள ஐதராபாத் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 1,584 பதற்றமான வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி (ஜிஹெச்எம்சி) தேர்தல் தேசிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களும் ஒவைசியின் கட்சியும், காங்கிரசும் களத்தில் உள்ளன.

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் களம் இறங்கியதால், இந்த தேர்தல் தென்மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றைய வாக்குப்பதிவு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைக்கு உட்பட்டு தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.

மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது 817 வாக்குச்சாவடிகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 9,101 வாக்குச் சாவடிகளில் 74,04,286 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். இதில், 2,146 சாதாரண வாக்குச் சாவடிகள், 1,517 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 167 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான 1,584 வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

இதுவரை மொத்தம் 4,187 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன. 3,066 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்புக்குள் உள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக ரூ.1.45 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ .10 லட்சம் மதிப்புள்ள மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக மொத்தம் 63 புகார்களில் 55 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்சனி குமார் கூறுகையில், ‘ஜிஹெச்எம்சி தேர்தலுக்காக 22,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்லா பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

முதல்வர் மீது அவமதிப்பு வழக்கு

தெலங்கானா பாஜக தலைவர் ஜி விவேக் வெங்கடசாமி கூறுகையில், ‘சமீபத்தில் நடந்த துபாகா இடைத்தேர்தலின் போது, ​​காவல்துறையினர் ரூ.1 கோடி பறிமுதல் செய்தனர். இவ்விவகார வழக்கில் சம்பந்தமில்லாமல் என்னை முதல்வர் சந்திர சேகர ராவ் இழுத்துவிட்டுள்ளார். அவர், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். எனவே, அவருக்கு எதிராக ரூ.100 கோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். மேலும் 7 நாட்களுக்குள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். காலேஸ்வரம் மற்றும் போத்துரெட்டி திட்டங்களில் நடக்கும் ஊழல்களை கடந்த சில மாதங்களாக வெளிப்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் என்னை வழக்கில் சிக்கவைத்துள்ளார். ஐதராபாத் மேயர் தேர்தலில் சந்திர சேகர ராவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பர்’ என்றார்.

Related Stories: