கிரேட்டர் நொய்டாவில் அமைகிறது 6000 கோடியில் டேட்டா சென்டர்: ஜேவரில் 100 படுக்கை வசதியுடன் மருத்துவமனை அமைக்கவும் உத்தரவு

கிரேட்டர் நொய்டா: மாநிலத்தில் தொழில் கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்துடன் ₹6,000 கோடி மதிப்பில் கிரேட்டர் நொய்டாவில் தகவல் திரட்டு மையம் (டேட்டா சென்டர்) அமைக்கும் பணிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். முதலீட்டாளர்களுக்கு அதிக சிரமம் இல்லாமலும், தொழில் களத்தில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் எனும் நோக்கத்துடனும் ‘எளிதில் வர்த்தகம்’ கொள்கையை மத்திய அரசு சில ஆண்டுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தது. தொழில் தொடங்குவதற்கு வசதியாக, தொழில் சார்ந்த உள்கட்டமைப்புகளை அதிகரிக்கும்படி அந்த கொள்கையில் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தாக்கத்தில் உருவான அந்த கொள்கைக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல் வடிவம் அளித்துள்ளார்.கானொலி முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைநகர் லக்னோவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடி, கிரேட்டர் நொய்டா டேட்டா சென்டர் கட்டுவதற்கான அடிக்கல்லை அம்மாநில முதல்வர் யோகி நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சதீஷ் மஹனாவும் கலந்து கொண்டார்.

அடிக்கல் நாட்டிய பின் முதல்வர் யோகி கூறியிருப்பதாவது: எளிதில் தொழில் தொடங்கும் திட்டத்தில், உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் ஆர்வமாக உள்ளனர். எளிதில் தொழில் தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டதில் நாட்டில் நமது மாநிலம் 2ம் இடத்தில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். டேட்டா சென்டர் அமைக்க கடந்த அக்டோபர் 24ல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இருபது ஏக்கர் பரப்பில் டேட்ட சென்டரை மும்பையின் பிரபல பில்டர் மூலம் கட்ட ஒப்பந்தம் ஆகியுள்ளது. மாநிலத்தில் தகவல் தொகுப்புகளை சேகரித்து, சேமித்து வைப்பதற்கான டேட்டா சென்டர் இதுவரை இல்லாமல் இருந்தது. எனவே அவுட் சோர்சிங் முறையில் வெளிநாட்டு நிறுவனங்கள், மாநில தொழில்துறை டேட்டாக்களை சேமித்து வைத்திருந்தனர். தகவல்கள் கசியக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக டேட்டா சென்டரின் அவசியம் தேவை என அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாநிலத்திலேயே இப்போது டேட்டா சென்டர் உருவாக உள்ளதால், தகவல் கசிவுக்கு வாய்ப்பில்லை.

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சர்வதேச ஜேவர் ஏர்போர்ட் அருகே 100 படுக்கை வசதிகளுடனும், அவசர சிகிச்சை மையமும் கொண்ட புதிய மருத்துவமனையை சர்வதேச தரத்தில் கட்டவும் உத்தரவிட்டு உள்ளேன். மருத்துவமனை திறக்கப்பட்ட பின்னர், ஏழை மக்கள் அண்டை மாநிலங்களில் சிகிச்சைக்கு செல்வது முற்றிலும் தவிர்க்கப்படும். அதிநவீன மருத்துவம் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அந்த மருத்துவமனை அமைக்கப்படும். இவ்வாறு யோகி கூறியுள்ளார்.

உள்ளூர் மக்களுக்கு பலன்

கிரேட்டர் நொய்டா, ஜேவர் தொகுதி எம்எல்ஏ தீரேந்திர சிங் கூறுகையில், ‘‘அமைக்கப்பட உள்ள மருத்துவமனையால் உள்ளூர்வாசிகள் பலன் அடைவார்கள். ஜேவர் சட்டசபை தொகுதிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கியுள்ள பிரத்யேக பரிசாக அமையவுள்ள மருத்துவமனையை கருதுகிறேன். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அனைத்து நவீன வசதிகளுடன் அமையும் மருத்துவமனையில் ஏழை மக்கள் பெரிய செலவின்றி வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: